நியூ யார்க் – அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷத்தை அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தொடங்கிய நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். சுமார் 57 சதவீத அமெரிக்கர்கள் டொனால்ட்டின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு பிரபலங்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு ஆதரவாக தனது கருத்தினை தெரிவித்துள்ள நிலையில், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் தற்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து 22 வருடங்களுக்கு முன்னர், தான் அமெரிக்கா வந்த போது, அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய அதிர்ஷ்டமாகத் தான் கருதியதாகவும், அதன் பிறகு தனது முயற்சிக்கு ஆதரவாக அங்கு பல்வேறு கதவுகள் திறக்கப்பட்டதாகவும் சுந்தர் பிச்சை தனது வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் அவர், அமெரிக்கா புலம்பெயர்ந்தோருக்கு பல்வேறு வாய்ப்புகளை அளித்துள்ளதாகவும், தன்னைப் பொறுத்தவரை அமெரிக்கா வாய்ப்புகளின் நாடு. இங்கு, இன பேதங்களை தவிர்த்து அனைவரையும் ஆதரிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக அவர், “நமது பயம் நம் மதிப்பினை தோற்கடித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் முஸ்லிம்களை ஆதரிப்போம். அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் உள்ள சிறுபான்மையினரை ஆதரிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.