சென்னை – தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் எட்டும் தொலைவில் உள்ள நிலையில், அதிமுகவைத் தவிர ஏனைய கட்சிகள் கூட்டணி பேரத்தைத் தொடங்கி விட்டன. திமுக, பாஜக என பெரும்பாலான கட்சிகள், தேமுதிகவை எப்படியும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும், விஜயகாந்த் பரபரப்பை அதிகப்படுத்த, தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், ஏற்கனவே தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை மற்றும் சில முக்கியத் தலைவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நேற்று மாலையும் பாஜகவின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இந்த சந்திப்பு குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “கடந்த முறை நான் விஜயகாந்தை சந்தித்தபோது, முரளிதரராவ் வரவில்லை. இதனால் அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாகவே முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்தனர். சில விசயங்கள் குறித்து தெளிவுபடுத்த இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், விஜயகாந்த், பாஜக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். அந்தக் கூட்டணி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கூட எடுபடாத நிலையில், விஜயகாந்த் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, ஒதுங்கியே இருந்து வருகிறார்.
சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூட, தன்னைக் கூட்டணியில் இருப்பதாகக் கூறிக் கொள்பவர்கள், கூறிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என பாஜக-வை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சியினர், “விஜயகாந்த் கூட்டணியில் இருந்து விலகியதாக இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை வெளியிட வில்லை” என்று கூறி வருகின்றனர்.
மேலும், எப்படியும் தேமுதிகவை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கச் செய்வதற்காக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். என்றாலும், விஜயகாந்த் இதுவரை பிடி கொடுக்கும் விதமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயாகாந்தின் இந்த செயல்பாடு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “தமிழகத்தின் பிரதான கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். மற்ற கட்சிகளிடம் இருந்து தனக்கு வரும் தொடர் அழைப்புகளைக் காரணம் காட்டி, அந்த கட்சியில் தனது கூட்டணி பேரத்தை அதிகரிக்கவே, அவர் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கியக் கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதி, விஜயகாந்திற்கு ஊடகத்தின் வாயிலாக கூட்டணிக்கு வருமாறு நேரடியான அழைப்பினை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.