கூச்சிங் – நேற்று நள்ளிரவு சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்த மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாதிம் (படம்), அடுத்த 3 மாதங்களுக்குள் சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சரவாக் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். “நான் பதவியேற்றது முதல் எனது வாக்குறுதிகளை தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே நிறைவேற்றி விட்டேன். இப்போது உங்களின் கடமை. மீண்டும் 5 ஆண்டுகளுக்கு எனது ஆட்சியைத் தொடர நீங்கள் எனக்கு இனி வாக்குறுதி தரவேண்டும்” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டில் மார்ச் 1ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றது முதல் பல மக்கள் நலன் சார்ந்த முடிவுகளைத் தான் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட சாதிம், தற்போது தனக்கு வயது 71 என்றும் முழுமையாக 5 ஆண்டுகளைக் கொண்ட ஒரு தவணையை நிறைவு செய்ததும் தான் பதவியில் இருந்து விலகப்போவதாகவும் உறுதி கூறியுள்ளார்.
சரவாக் தேர்தல்கள் கடுமையாக இருக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி மிகவும் பலவீனமாக இருப்பதால் அட்னான் சாதிம் தலைமையிலான சரவாக் தேசிய முன்னணி சுலபமாக இந்த முறையும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது 71 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள சரவாக் மாநில சட்டமன்றத்தில் தற்போது 11 தொகுதிகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆளும் தேசிய முன்னணி 35 தொகுதிகளைத் தற்போது தன் வசம் வைத்திருக்கின்றது.
கூடுதல் தொகுதிகள் அதிகரிப்பு – இஸ்லாம் அதிகாரபூர்வ மதமில்லை என்ற அறிவிப்பு – ஆங்கிலம் சரவாக் மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் – போன்ற முடிவுகளால் அட்னான் சாதிம் தலைமையிலான தேசிய முன்னணி மிக எளிதாக இந்த முறை பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருதப்படுகின்றது.