ரியாத் – ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகக் கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு பலத்த சேதங்களை விளைவித்ததைத் தொடர்ந்து அரேபியா, ஈரானுடனான தனது தூதரக உறவுகளை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முறித்துக் கொண்டுள்ளது.
ஈரானின் புகழ் பெற்ற ஷியாட் மதகுரு ஷேக் நிமிர் அல்-நிமிர் (Sheikh Nimr al-Nimr) என்பவரை அரேபியா தூக்கில் இட்டதைத் தொடர்ந்து ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
56 வயதான நிமிர் கடந்த 2011ஆம் ஆண்டில் சவுதி அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டி விட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஷியாட் முஸ்லீம்கள் அரேபியாவில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி நிமிர் போராடி வந்தவராவார்.
மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 46 பேர் நிமிரோடு தூக்கிலிடப்பட்டனர். அளவுக்கதிகமான தூக்குத் தண்டணைகளை நிறைவேற்றும் நாடாக – அளவுக்கதிகமான தண்டனைகளை வழங்கும் நாடாக அரேபியா பார்க்கப்படுகின்றது.
ஈரானின் பெரும்பான்மையான மக்கள் ஷியாட் முஸ்லீம்கள் ஆவர். அரேபிய மக்களோ பெரும்பான்மை சன்னி முஸ்லீம்களாவர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வரலாற்று ரீதியான பகைமை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
தூதரக உறவுகளை முறிக்கும் அறிவிப்பை வெளியிட்ட அரேபிய வெளியுறவு அமைச்சர் அடல் அல்-ஜூபிர் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஈரானிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென கெடு விதித்துள்ளார். ஈரான் தொடர்ந்து அரேபியாவுக்கு எதிரான போக்குகளையே கையாண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதோடு, சன்னி-ஷியாட் முஸ்லீம் பிரிவினரிடையே மேலும் கடுமையான இடைவெளி ஏற்பட்டுள்ளது.
ஷியாட் மதகுருவின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடந்த சனிக்கிழமை டெஹ்ரானிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்திலும், மற்றொரு நகரான மர்ஷாட் நகரில் உள்ள அரேபியாவின் துணைத் தூதரகத்திலும் நுழைந்தனர்.
அரேபியாவின் முடிவைத் தொடர்ந்து ஈரானும் தனது தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.