Home Featured நாடு அரசியல் பார்வை: அடுத்த கிளந்தான் மந்திரி பெசாராக – நிக் அசிஸ் மகன் நிக் ஓமார்...

அரசியல் பார்வை: அடுத்த கிளந்தான் மந்திரி பெசாராக – நிக் அசிஸ் மகன் நிக் ஓமார் உருவெடுக்கலாம்!

677
0
SHARE
Ad

கோத்தா பாரு: அடுத்த 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்பாராதவிதமாக மலேசிய அரசியல் களத்தில் அனைவரின் பார்வையும் பதியும் மாநிலமாக கிளந்தான் மாநிலம் உருவெடுத்துள்ளது.

nik aziz2கிளந்தான் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பாஸ் கட்சியைப் பிரதிநிதித்து ஆட்சி செய்து வந்தவர் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவரான நிக் அசிஸ் (படம்).

பாஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றதற்கும், அம்னோவுக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்ததற்கும், குறிப்பாக முஸ்லீம் அல்லாத மலேசியர்களிடையே பாஸ் கட்சி மதிக்கப்பட்டதற்கும் முக்கியக் காரணம் நிக் அசிஸ்தான்.

#TamilSchoolmychoice

ஆனால், இப்போது, அம்னோவுடன் பாஸ் தலைவர்கள் கைகோர்க்க முற்பட்டுள்ள வேளையில், அந்தக் கட்சியிலிருந்து பல முக்கியத் தலைவர்கள் விலகி அமானா ராக்யாட் என்ற புதிய அரசியல் கட்சியைத் தோற்றுவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பாக, நிக் அசிசின் இரண்டாவது புதல்வர் நிக் ஓமார் நிக் அசிஸ், பாஸ் கட்சியிலிருந்து விலகி, அமானா நெகாரா கட்சியில் இணைந்துள்ளது பாஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகவும், கிளந்தான் அரசியலில் முக்கிய மாற்றமாகவும் பார்க்கப்படுகின்றது.

Nik-Omar-Nik-Ab-Azizஅடுத்த பொதுத் தேர்தலில், பிகேஆர், அமானா நெகாரா, ஜசெக ஆகிய கட்சிகள் இணைந்துள்ள பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கிளந்தான் மாநிலத்தில் போட்டியிட்டு, மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளை வென்றால், நிக் ஓமார்தான் (படம்) கிளந்தான் மந்திரி பெசாராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறைந்த முன்னாள் கிளந்தான் மந்திரி பெசார் நிக் அசிஸ் மீது கிளந்தான் மக்கள் வைத்திருக்கும் மதிப்பு நிக் ஓமாருக்கு ஆதரவான வாக்குகளாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னோடியாக அமானா கட்சியின் கிளந்தான் மாநில ஷாரியா மன்றத்தின் தலைவராகவும் நிக் ஓமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அமானா, பாஸ் போன்ற கட்சிகளில் மாநிலத் தலைவருக்கு ஈடான பதவியாகும் இது. இதனைத் தொடர்ந்து, பாஸ் கட்சிக்கு எதிரான பிரச்சாரத் தாக்குதலையும், அமானா கட்சியை வளர்க்கும், விரிவாக்கும் முயற்சிகளிலும் நிக் ஓமார் ஈடுபடுவார்.

இன்னொரு புதல்வர் இன்னும் பாஸ் கட்சியில்….

இதற்கிடையில் நிக் அசிசின் மற்றொரு புதல்வரான நிக் அப்டு நிக் அசிஸ் (படம்) இன்னும் பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவராகவும், பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.

Nik Mohd Abduhநிக் ஓமார் அமானாவில் சேர்ந்துள்ளதைத் தொடர்ந்து, கிளந்தானின் எதிர்கால அரசியல், நிக் அசிசின் இரண்டு புதல்வர்களுக்கும் இடையிலான அரசியல் போராட்டமாக உருவெடுக்குமா அல்லது, நிக் அப்டுவும் காலப் போக்கில் அமானாவில் வந்து இணைந்து விடுவாரா என்ற அரசியல் ஆரூடங்களும் கிளந்தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக உலா வருகின்றன.

கிளந்தான் மாநில வாக்காளர்கள்-மக்களின் அபிமானத்தைப் பெற்ற நிக் அசிசின் இரண்டு புதல்வர்கள் எதிரும் புதிருமான இரு வெவ்வேறு கட்சிகளில் இணைந்துள்ளது, சாதாரணமாக மந்தமாக இருந்து வரும் கிளந்தான் மாநில அரசியல் களத்தில் கூடுதல் விறுவிறுப்பையும், சுவாரசியங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பாஸ் கட்சிக்கு பின்னடைவு

அடுத்த பொதுத் தேர்தலில், அம்னோவுடன் இணைந்து பணியாற்றும் போக்கினால், பாஸ் கட்சி நாட்டின் பல பகுதிகளில் பெருத்த பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், கிளந்தான் மாநிலத்தில் தனது ஆதரவை அது இழக்காது என கருதப்பட்டது. ஆனால், இப்போது நிக் அசிஸ் மகன் நிக் ஓமார் பாஸ் கட்சியிலிருந்து விலகி அமானா கட்சியில் இணைந்துள்ளதால், இனி பாஸ் கட்சியின் நிலைமை கிளந்தான் மாநிலத்தில் மேலும் திண்டாட்டமாக இருக்கப் போகின்றது.

PAS-Logo-Sliderஇத்தனைக்கும் பாஸ்-அம்னோ இடையிலான அதிகாரபூர்வ பேச்சு வார்த்தைகள் இதுவரை தொடங்கப்படவே இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையில், இணைப்பு உறவுகள் நடைபெறுமா என்பது கூட தெரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக, பாஸ் கட்சி இரண்டாக உடைந்துவிட்டதோடு, அந்தக் கட்சியிலிருந்து பலரும் விலகி அமானாவில் இணைந்து வருகின்றனர்.

உண்மையிலேயே, அம்னோவுடன் பாஸ் அதிகாரபூர்வமாக இணையும் நிலைமை ஏற்பட்டால், விளைவுகள் மேலும் மோசமாகலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறு அம்னோவுடன்-பாஸ் இணைந்து கொண்டால், அதற்குப் பின்னரும் தற்போது பாஸ் கட்சியில் இருந்து வரும் நிக் அசிசின் புதல்வர் நிக் அப்டு, தொடர்ந்து பாஸ் கட்சியிலேயே நீடித்தது வருவரா என்பது இன்னொரு சுவாரசியான கேள்வியாகும்.

பாஸ்-அம்னோ அரசியல் ரீதியாக இணைந்தால், தனது வாழ்நாள் முழுக்க அம்னோவை எதிர்த்து வந்த மறைந்த தனது தந்தை நிக் அசிசின் கொள்கைகளுக்கு மரியாதை கொடுத்து நிக் அப்டு, பாஸ் கட்சியிலிருந்து விலகுவாரா –

தனது சகோதரன் நிக் ஓமாருடன் அமானாவில் இணைவாரா –

அல்லது பாஸ் கட்சியிலேயே தொடர்ந்து நீடித்து, தனது சகோதரனுடன் கிளந்தான் மாநிலத்தில் அரசியல் போராட்டத்தை நடத்துவாரா என்பதைக் காண கிளந்தான் மாநில மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

-இரா.முத்தரசன்