கோலாலம்பூர் – மலேசியாவைச் சேர்ந்த 8 சிறுவர்களுக்கு தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், அதி பயங்கரமான பயிற்சிகளை அளித்து வருவதாக புலனாய்வு அதிகாரிகள் சமீபத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவுத் தலைவர் முகமட் ஃபசி ஹரூன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தான் ஐஎஸ்ஐஎஸ் யுத்தம் செய்யும் பகுதிகளுக்கு கொண்டு போய் விட்டிருக்கின்றனர். தற்போது அந்தச் சிறுவர்கள் ஐஎஸ் போராளிகளாக உருவாகி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
12 பெண்கள் உட்பட 47 மலேசியர்கள் ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முகமட் ஃபசி ஹரூன், அவர்களை மீட்க அரசு முயற்சித்ததாகவும், ஆனால் அவர்கள், போராட்டங்களில் உயிர்த் தியாகம் செய்வதையே லட்சியமாகக் கொண்டு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.