Home Featured நாடு 40 நாடாளுமன்ற – 90 சட்டமன்ற தொகுதிகள்! பொதுத் தேர்தலுக்கான மசீச வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது...

40 நாடாளுமன்ற – 90 சட்டமன்ற தொகுதிகள்! பொதுத் தேர்தலுக்கான மசீச வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது – லியோவ் அறிவிப்பு!

853
0
SHARE
Ad

liowகோலாலம்பூர் – கடந்த சில தினங்களாக தேசிய முன்னணி வட்டாரங்களில் அடுத்த பொதுத் தேர்தலை குறிவைத்து அறிவிப்புகளும் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவதற்கு முன்கூட்டியே பொதுத் தேர்தலை பிரதமர் நஜிப் நடத்தக் கூடும் என்ற ஆரூடங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

நடப்பு மத்திய அரசாங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் மே 2018 வரை நீடிக்கும். இருப்பினும் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சரவாக் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணி அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த வெற்றியைத் தொடர்ந்து, அந்த உற்சாகத்திலேயே பொதுத் தேர்தலையும் பிரதமர் நஜிப் நடத்தக் கூடும் என்ற எண்ணம் அரசியல் பார்வையாளர்களிடையே பரவி வருகின்றது.

#TamilSchoolmychoice

மசீச பொதுத் தேர்தலுக்குத் தயார்!

mca-flag1அடுத்த 14வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மலேசிய சீனர் சங்கம் (மசீச) தயாரித்து விட்டது என அதன் தேசியத் தலைவரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான லியோவ் தியோங் லாய் அறிவித்துள்ளார்.

மசீச போட்டியிடவுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள், 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் தயாராகிவிட்டது எனத் தெரிவித்துள்ள லியோவ், கடந்த பொதுத் தேர்தல்களைப் போல் அல்லாது, இந்த முறை இறுதி நேரத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான போட்டியை இந்த முறை மசீச எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், சீன வாக்காளர்களில் ஏறத்தாழ 90 சதவீதம் ஜசெக பக்கம் சாய்ந்து விட்ட நிலையில், சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் மசீச ஜசெகவுடன் மோதி வெல்வது என்பது மிகவும் கடினமாகும்.

ஜோகூர் மீண்டும் கைகொடுக்குமா?

MUHYIDDIN_PPAUH (1)வழக்கமாக, மசீசவுக்கு கைகொடுக்கும் மாநிலமாகத் திகழ்வது ஜோகூர்தான்! இந்த மாநிலத்தின் சீனர்களும், மலாய்க்காரர்களும் பொதுவாக தேசிய முன்னணிக்குத் தங்களின் பெரும்பான்மை வாக்குகளை வழங்கி வந்திருப்பவர்கள் என்ற காரணத்தால், மசீசவும் இங்கு போட்டியிட்ட தொகுதிகளில் வென்று வந்திருக்கின்றது.

ஆனால், அந்த நடைமுறையைக் கூட கடந்த பொதுத் தேர்தலில் ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் உடைத்தார். முதன் முறையாக ஜோகூர் மாநிலத்தில் களமிறங்கி வெற்றியும் பெற்றார் கிட் சியாங்.

லாபிஸ் போன்ற மற்ற சில பாரம்பரிய தேசிய முன்னணி தொகுதிகளில் கூட சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில்தான், மசீசவால் வெல்ல முடிந்தது.

இந்த முறை முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கத்தால் ஜோகூர் மாநிலத்தில் அம்னோவினரிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பால், மலாய்க்கார வாக்குளிலும் பிளவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

ஜசெக மீண்டும் முதன்மை மாநிலமாக ஜோகூரை முன்னிறுத்தி 14வது பொதுத் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் மசீச சந்திக்கப்போகும் மிகக் கடுமையான தேர்தலாக 14வது பொதுத் தேர்தல் இருக்கும் என்பதாலேயே, முன்கூட்டியே வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை இப்போதே தயார்ப்படுத்தும் முயற்சியில் மசீச ஏற்பட்டுள்ளது எனக் கருதப்படுகின்றது.

-இரா.முத்தரசன்