லண்டன் – கடந்த சில வாரங்களில் மட்டும் தமிழகத்தின் கடற்கரையிலும், ஒடிசா மாநிலத்தின் கடற்கரையிலும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இறந்த நிலையிலும், உயிருடனும் கரை ஒதுங்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், இங்கிலாந்து கடற்கரையிலும் திமிங்கலங்கள் இறந்து ஒதுங்கி உள்ள சம்பவம், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ச்சியாக நடக்கும் இந்த சம்பவங்கள் மிகப் பெரும் ஆபத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிறு அன்று, இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரை நகரமான ஸ்கீக்நெஸ் கரையில், 48 அடி நீளமுள்ள 3 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த வந்த காவல்துறையினர், அவற்றை அப்புறப்படுத்தினர்.
திமிங்கிலங்கள் தொடர்ச்சியாக கரை ஒதுங்குவது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “இந்திய கடற்பகுதியில் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து இந்திய அரசு தெரிவிக்க வேண்டும். இங்கிலாந்தின் கடற்கரையிலும், மிகப் பெரும் திமிங்கலங்கள் இறந்து நிலையில் கரை ஒதுங்கியிருகின்றன. இது தொடர்பாக உலக நாடுகள் உடனடியாக ஆராய வேண்டும். அஜாக்கிரதையாக இருக்கும்பட்சத்தில் மிகப் பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரலாம்” என்று தெரிவித்துள்ளனர்.