வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு தற்போதைய அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஹிலாரி திறமையானவர், தேசப்பற்று மிக்கவர், மிக நீண்ட காலமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அனுபவம் மிக்க அவரால், அமெரிக்காவிற்கு திறமையான ஆட்சியைக் கொடுக்க முடியும்.”
“ஒரு பெண் என்பதற்காக, கட்சியினர் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. அவரது திறமையின் அடிப்படையிலேயே பெரும்பாலானோர் அவரை ஆதரிகின்றனர். அரசியலில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட வேண்டும். எனது மகள்களுக்கும் இதையே போதிக்கிறேன். எனது ஆட்சிக்குப் பிறகு ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஹிலாரிக்கு அதிபர் ஒபாமா முதல்முறையாக ஆதரவு தெரிவித்துள்ளது, அவருக்கான மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.