ஜெனீவா – டிங்கியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தனது அடுத்தகட்ட தாக்குதலை ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் ‘ஜிகா’ (Zika) வைரஸ் மூலம் தொடங்கிவிட்டன. டிங்கி போல கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தற்போது உலக அளவில் 23 நாடுகளில் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. முக்கியமாக தாய்மார்களின் குழந்தைப் பிறப்பில் பாதிப்பினை ஏற்படுத்தும் இந்த ஜிகா வைரசிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குணமாக்கும் மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வருகிற பிப்ரவரி 1-ம் தேதி அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உலக சுகாதார மையம் ஏற்பாடு செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள் கூடும் அந்த சந்திப்பு, நடைபெற இருக்கிறது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்கரெட் சான் கூறுகையில், “உலக அளவில் மிகத் தீவிர எச்சரிக்கை நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைப் பிறப்பில் பல்வேறு அசாதாரண தாக்கங்களை இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்பதால், அடுத்த கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.