புதுடெல்லி – இந்தியா – நேபாளம், பூடான் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துணை இராணுவப் படையான சாஷாஸ்ட்ரா சீமா பாலுக்குத் தலைவராக தமிழக காவல்துறை அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா, தமிழகக் காவல்துறையில் உயர் பதவியில் இருந்து வந்தார். பின்னர் மத்திய அரசின் சிபிஐ பிரிவு, தேசிய குற்ற ஆவண அலுவலகம் ஆகியவற்றில் உயர் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தில் இதுவரை இந்தப் பதவிக்கு தலைவராக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது இல்லை.
அதனால், துணை ராணுவப்படையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா ராமசுந்தரம் பெறுகிறார்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி ஓய்வு பெறவுள்ள அர்ச்சனா அதுவரையில் இந்தப் பதவியில் பொறுப்பில் இருப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.