Home Featured நாடு சபாவில் வழக்கத்தை விடக் கூடுதலாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது ஏன்?

சபாவில் வழக்கத்தை விடக் கூடுதலாக காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது ஏன்?

944
0
SHARE
Ad
2015-polis-ops-samseng-1

கோத்தா கினபாலு – சபா தலைநகரில் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலை அம்மாநில காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

“இங்கு ஐஎஸ் போராளிகள் எவரும் இல்லை. தலைநகரில் ரோந்துப் பணியை மேற்கொள்வது வழக்கமான நடைமுறைதான். அதிலும் சீனப் பெருநாள் நெருங்கி வருவதால் கண்காணிப்பு அதிகமாக உள்ளது,” என சபா காவல்துறை ஆணையர் டத்தோ அப்துல் ரஷிட் ஹாருன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு காவல்துறையின் டிரக் வாகனங்கள் நிற்பதும் வழக்கமான ஒன்றுதான் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனவே வதந்திகளைப் பொருட்படுத்த வேண்டாம். எத்தகைய தகவலாக இருந்தாலும் காவல்துறையை அணுகி அதை உறுதி செய்து கொள்ளுங்கள். கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை,” என நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டத்தோ அப்துல் ரஷிட்.

“கேகே (கோத்தா கினபாலு) செல்லாதீர்கள். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். எனவே அங்கு செல்வதை தவிர்க்கவும்,” என்று ஒரு தகவல் வாட்ஸ் ஆப் மூலம் வேகமாகப் பரவி வருகிறது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுவதாகவும், வழக்கத்தைவிட கோத்தகினபாலுவில் கூடுதலான போலிசார் ரோந்து செல்வதால், மக்களின் பீதி அதிகமாக உள்ளது என்றும் ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இதையொட்டி கேள்வி எழுப்பப்பட்ட போதே டத்தோ ரஷிட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்ல வேண்டாம். விடுமுறையின்போது வெளியூர் செல்பவர்கள் காவல்துறைக்கும் அண்டை வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்,” என்றும் ரஷிட் மேலும் அறிவுறுத்தினார்.