கோலாலம்பூர் – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய லெவி கட்டண விதிப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைத் தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புதிய லெவி கட்டண விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஹமிடி மேற்கண்டவாறு கூறினார்.
“புதிய லெவி கட்டண முறை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள போதிலும், இது தொடர்பாக எழுந்துள்ள அதிருப்திகள் குறித்து ஆராய அரசாங்கம் தயங்காது,” என்றார் ஹமிடி.
அதேசமயம், எக்காலமும் மலேசியாவால் அந்நியத் தொழிலாளர்களை மட்டுமே சார்ந்திருக்க இயலாது என அவர் கூறினார்.
குறைந்தபட்ச அளவில் அந்நியத் தொழிலாளர்களை சார்ந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், உள்நாட்டு மனித ஆற்றலைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
“சில பணிகள் சிரமமானவை, சுகாதாரமற்றவை, ஆபத்தானவை. அத்தகைய பணிகளுக்கு நீண்ட கால திட்டம் தேவைப்படும், அப்படிப்பட்ட பணிகளுக்கு உள்நாட்டுத் தொழிலாளர்களை ஈடுபடுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இதற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என துணைப் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.