விசாகபட்டினம் – காஷ்மீரில் உள்ள சியாச்சின் போர் முனையில், அவ்வப்போது ஏற்படும் பனிச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் இறந்து வருவதால், அங்கிருக்கும் இராணுவம் வாபஸ் பெறப்படுமா? என்ற கேள்விக்கு, “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என இந்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
“உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில்,அண்மையில், பனிச்சரிவில் சிக்கி 10 இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகிவிடாது” என்று ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நடக்கும், சர்வதேச கடற்படை மாநாட்டில் கலந்து கொள்ள வந்த மனோகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இமயமலையில் அமைந்துள்ள பனிப் பிரதேசமான சியாச்சினில், கடந்த 1984-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ஊடுருவலை அடுத்து, அங்கு நிரந்தரமாக இந்திய ராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர், இந்த 32 ஆண்டு காலத்தில், பனிச்சரிவு, ஆக்சிஜன் பற்றாக்குறை, பனியால் ஏற்படும் நோய் போன்றவற்றால் 879 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சியாச்சின் இராணுவ முகாமிற்கு ஹெலிகாப்டர் மூலமாகத் தான் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த முகாமிற்குத் தேவையான பொருட்களை விநியோகிக்க ஒரு நாளைக்கு, 6.8 கோடி ரூபாய் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.