Home Featured நாடு நாட்டிலுள்ள 4.6 மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்களை முதலில் வெளியேற்றுங்கள்!

நாட்டிலுள்ள 4.6 மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்களை முதலில் வெளியேற்றுங்கள்!

871
0
SHARE
Ad

MDG--Foreign-workers-in-M-007கோலாலம்பூர் – மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 4.6 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பின்னர் வங்க தேசத்தில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவிற்குக் கொண்டு வாருங்கள் என்று அரசு சாரா இயக்கம் ஒன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பான இக்லாஸ் (Ikhlas) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கள்ளக் குடியேறிகள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அரசாங்கம் கொண்டு வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

“இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லுமானால் ஒருநாள் வெளிநாட்டினர்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமனம் செய்ய நேரிடும்” என்று இக்லாஸ் தலைவர் ரிட்சுவான் அப்துல்லா இன்று நடைபெற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நாட்டில் தங்கியிருக்கும் பல வெளிநாட்டினர் துணி விற்பனை செய்வதில் இருந்து வீட்டிற்கு மராமத்து வேலைகள் செய்வது வரை அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மலேசியர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை அபகரித்துக் கொண்டுள்ளனர்” என்றும் ரிட்சுவான் தெரிவித்துள்ளார்.

இன்னும் அதிகமான வெளிநாட்டினர்களை மலேசியாவிற்கு கொண்டுவந்தால், நாட்டில் இருந்து பணம் வெளியேறுவது அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியாட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாட்டில் மொத்தம் 6.7 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 2.1 மில்லியன் தொழிலாளர்களே முறையான ஆவணங்களுடன் இருக்கின்றனர். எஞ்சிய 4.6 மில்லியன் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகவே தங்கி இருக்கின்றனர்.

அண்மையில் வெளிவந்த செய்திகளின் படி, மலேசிய அரசாங்கம், வங்காள தேச அரசுடன் ஒப்பந்தம் செய்து 1.5 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்டு வருமானால், சுமார் 10,000 இக்லாஸ் உறுப்பினர்களுடன் சேர்ந்து வங்காள தேச தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் ரிட்சுவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.