கோலாலம்பூர் – கெடா மாநில அம்னோவின் தலைவராக கெடா மந்திரி பெசார் அகமட் பாஷா முகமட் ஹனிபா இன்று நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெடா மாநிலம் முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
கடந்த வாரம் முக்ரிசை மந்திரி பெசார் பதவிலிருந்து நீக்கம் செய்து அகமட் பாஷாவை பதிவியில் அமர்த்திய அம்னோ, இன்று முக்ரிசை அம்னோ தலைவர் பொறுப்பிலிருந்தும் விலக்கி, அப்பொறுப்பையும் அகமட் பாஷாவிடமே கொடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் இன்று காலை அறிவித்தார்.
“கெடா அம்னோவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அறிவிக்கும் படி நஜிப் எனக்குக் கட்டளையிட்டுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முக்ரிசுக்கு ஆயிரம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெங்கு அட்னான் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் அகமட் பாஷா வகித்து வந்த அம்னோ துணைத்தலைவர் பதவி, தற்போது கல்வியமைச்சர் மாட்சிர் காலிட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.