கதை என்று பார்த்தால், தமிழ் சினிமாவில் காலங்காலமாக சொல்லப்பட்டு எளிமையான கதை தான் என்றாலும், திரைக்கதையையும், கதை நடக்கும் சூழலையும், கதாப்பாத்திரப் படைப்புகளையும் 2020-ம் ஆண்டில் நடப்பது போல் மாற்றி, அதை டார்க் காமெடி பாணியில் சொல்லியிருப்பதில் தான் இந்தப் படம் புதுமை சேர்க்கிறது.
இதற்கு முன்பு மூடர் கூடம், சூது கவ்வும், நேரம், சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை இந்த டார்க் காமெடிக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
நடிப்பு
ஜில் ஜங் ஜக்-காக சித்தார்த், அவினாஷ், சனந்த் ஆகிய மூவரும் அந்தக் கதாப்பாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். முறுக்கு மீசையும், குறுந்தாடியும் நீல நிற தலைமுடியுமாக சித்தார்த், இளைஞர்களிடையே புதிய டிரண்டை உருவாக்கியிருக்கிறார். நடிப்பிலும் துறுதுறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவருக்கு இணையாக அவினாஷும், சனந்தும் காமெடியால் அசத்தியிருக்கிறார்கள். அதிலும் இருவரும் எரிகோலி விளையாடும் சீனில், நம்மையும் மறந்து சிரித்து விடுகின்றோம். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, தொட்டதற்கெல்லாம் ஆச்சர்யத்தை அள்ளி வீசும் அவரது முக பாவணைகள் ஈர்க்கின்றது.
இவர்களோடு கடைசி வரை நம்மை சிரிக்க வைப்பது பை கதாப்பாத்திரம் தான். பை கதாப்பாத்திரத்தின் குரலும், பேசும் வசனங்களும் கலகலப்பு சேர்க்கின்றன.
திரைக்கதை, வசனம்
திரைக்கதை அமைப்பில் பல நுணுக்கங்களை சேர்த்து கிளைக் கதைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதனால் கதையோடு பயணிக்க மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. அதனாலேயே படத்தில் இடம் பெறும் மறைமுக காமெடிகளை அவ்வளவு எளிதில் புரிந்து கொண்டு ரசிக்க இயலாமல் போய்விடுகின்றது.
அதனால், இப்படம் எதார்த்த சினிமா ரசிகர்களிடம் எடுபடுமா என்பது சந்தேகமே. ஆனால், கிளைமாக்ஸ் முற்றுப்புள்ளி, ஆச்சர்யக்குறி போன்ற விசயங்களும், துப்பாக்கிகளின் பெயர்களை சொல்லி டயனோசர் காலத்தை ஒப்பிடுவது போன்றவை வித்தியாச சினிமா ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் திரைக்கதை அமைப்பும், கதாப்பாத்திரப் படைப்புகளும், விஞ்ஞானப்பூர்வமான ஐடியாக்களும் புதுமை.
குறிப்பாக கதாப்பாத்திரங்களின் பெயர்கள் மங்களம், மருந்து, பை, அட்டாக் போன்றவை மிகவும் ரசிக்க வைக்கின்றன.
படத்தில் தொய்வும் உள்ளது. இரண்டாம் பாதி தொடங்கியது முதல் திரைக்கதையின் வேகம் சற்று குறைந்து, காரை இழுப்பது போல், நம்மையும் வம்படியாக இழுத்துச் செல்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை
ஸ்ரோயஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கதைக்கேற்ற சூழலிலும், வண்ணத்திலும் அமைந்துள்ளன. சூதாட்ட விடுதி, மதுபானவிடுதி உள்ளிட்ட பல இடங்களில் காட்சியமைப்புகள் அருமை.
சாலையில் கார் செல்லும் போது, டாப் ஆங்கிலில் வரும் ஒரு காட்சி மிகவும் ரசிக்க வைத்தது.
ஆக, மொத்தமாக இந்தப் படத்தைப் பற்றி கூறினால், நுணுக்கமான திரைக்கதை அமைப்பும், அறிவார்ந்த கதாப்பாத்திரப் படைப்புகளும் தமிழ் சினிமாவை புதிய இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்றாலும், வசனங்களை இன்னும் தெளிவாக்கி, ஆங்காங்கே கதைக்கேற்ற நகைச்சுவையை அதிகரித்திருந்தால் அனைத்துவிதமான ரசிகர்களையும் கவர்ந்திருக்கும்.
இன்னொரு விசயம்… படத்துல ஹீரோயினே இல்லங்க!!! கவர்ச்சி, கிளுகிளுப்பெல்லாம் ஊறுகாய் அளவிற்குக் கூட இருக்காது. அதனால் அப்படிப்பட்ட சமாச்சாரங்களை எதிர்பார்த்து படம் பார்க்கப்போகும் ரசிகர்களையும் இந்தப் படம் கவராது.
எனவே ஜில் ஜங் ஜக் – வித்தியாசமான முயற்சி ஆனால் எல்லா ரசிகர்களையும் ஈர்க்காது! புரிந்தால் மட்டுமே ரசித்து சிரிக்க முடியும்!
– ஃபீனிக்ஸ்தாசன்