கோலாலம்பூர் – இன்று பிற்பகல் 4.00 மணிக்குத் தொடங்கும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக அவரை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிவேன் என சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நஸ்ரியின் தீர்மானத்தில் மொகிதினை மட்டும் நீக்கும்படி வலியுறுத்தப்படுமா அல்லது முன்னாள் பிரதமர் துன் மகாதீர், கட்சியின் உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோரையும் நீக்கும்படி உச்சமன்றம் கேட்டுக் கொள்ளப்படுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
தொடர்ந்து பிரதமர் நஜிப் மீதும், 1எம்டிபி விவகாரங்கள் குறித்தும் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி வரும், மொகிதினை இனியும் கட்சியில் விட்டு வைப்பது தனக்கே ஆபத்தாக முடியும் என நஜிப் கருதலாம்.
அல்லது, ஏற்கனவே, தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டு இறுகிக் கிடக்கும் 1எம்டிபி விவகாரங்களை ஏன் இன்னும் பூதாகாரமாகப் பெரிதாக்க வேண்டும் – மொகிதினை விலக்குவதை மேலும் ஒத்தி வைக்கலாம் என்றும் நஜிப் சிந்திக்கலாம்.
மொகிதினை கட்சியிலிருந்து நீக்கி விட்டால், பின்னர் நஜிப்புக்கு எதிராகப் பகிரங்கமாகவும், மேலும் வெளிப்படையாகவும் போராடுவதற்கு அந்த நீக்கம் மொகிதினுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
ஏற்கனவே, மொகிதினை துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டதால், இனியும் அவரைத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது என்பது நஜிப்புக்கு எளிதான காரியமாகவே இருக்கும். அதனால் கட்சியில் பெரிதாக எதிர்ப்போ, போராட்டமோ வெடிக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அதற்குப் பின்னர் மக்கள் மத்தியில் எழக் கூடிய எதிர்மறையான விமர்சனங்களை – எழுச்சியை நஜிப் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பது அவரது அரசியல் பயணத்தில் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.
அதே வேளையில், கட்சியிலிருந்து நீக்கப்படுவதன் மூலம் தனக்குக் கிடைக்கக் கூடிய அனுதாபம், ஆதரவு, ஆகியவற்றைப் பயன்படுத்தி, மொகிதின் சரியாக காய் நகர்த்தி தனது போராட்டத்தில் நஜிப்பை வீழ்த்திக் காட்டுவாரா?
அதற்காக எதிர்க்கட்சிகளுடன் கைகோர்ப்பாரா?
எவ்வாறு போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு மொகிதின் எடுத்துச் செல்வார் என்பதும் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் கேள்விகளாகும்.
இன்றைய, அம்னோ உச்சமன்றக் கூட்டம் மலேசிய அரசியலின் அடுத்த கட்டத்தை முடிவு செய்யும் களமாக அமையும்!
-இரா.முத்தரசன்