சென்னை – தி.மு.க. கூட்டணியில் சேர விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் இன்னமும் உறுதி செய்யப்படாவிட்டாலும் தி.மு.க., தே.மு.தி.க. இரு கட்சிகளின் தொண்டர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
பல இடங்களில் “வெற்றி உறுதி” என்று தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்கள் கை கோர்த்து விட்டனர். அதே சமயத்தில் பா.ஜ.க. தலைவர்கள் கடும் ஏமாற்றமான நிலையில் உள்ளனர்.
குறிப்பாக விஜயகாந்தின் முடிவால், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தவிப்பில் தள்ளப்பட்டுள்ளனர். மத்தியில் ஆளும் பலம் வாய்ந்த பாரதிய ஜனதா, தமிழ்நாட்டில் தற்போது தனித்து விடப்பட்டுள்ளது.
அந்த கட்சி அடுத்து யாருடன் சென்று கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கடந்த சில தினங்களாக பாட்டாளி மக்கள் கட்சியிடமும் பேசி வந்தனர்.
பா.ம.க.வும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தயார் என்று கூறியது. ஆனால் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று பா.ம.க. நிபந்தனை விதித்தது.
இதனால் பா.ம.க.வுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை அப்படியே உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக பிரதமர் மோடி, அத்வானி, அருண்ஜெட்லி, அமித்ஷா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுடன் நல்ல நட்புடன் உள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. ஆதரவு தேவை இருப்பதால் ஜெயலலிதாவிடம் பா.ஜ.க. நல்ல அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. எனவே பா.ம.க. கூட்டணிக்கு ஒத்துவராத பட்சத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கணிசமான வாக்குகளை பெற்றது. காங்கிரசை விட அதிக வாக்கு சதவீதத்தை தமிழக பா.ஜ.க. பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பா.ஜ.க.வை சேர்த்தால் அது 3 சதவீதம் வாக்குகளை அதிகமாக்கும் என்பதால் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வை சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.