கோலாலம்பூர் – காணாமல் போன எம்எச் 370 விமானம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு, அங்கு கடலோரத்தில் காணப்பட்ட விமானப் பாகம் ஒன்று, எம்எச் 370 விமானத்தினுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த தற்போது மொசாம்பிக் வந்தடைந்துள்ளது.
இந்தக் குழு சனிக்கிழமை மொசாம்பிக் சென்றடைந்ததாக கூறிய போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், மொசாம்பிக் நாட்டின் பொதுப் போக்குவரத்து இலாகாவின் தலைமைச் செயலாளருடன் அந்தக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவர் என்றும் கூறினர்.
“காணாமல் போன விமானம் குறித்து ஆய்வு செய்து வரும் ஆஸ்திரேலிய அதிகாரிகளும் தற்போது மொசாம்பிக் நாட்டில் இருப்பதால், கிடைத்திருக்கும் விமானப் பாகத்தை அடுத்து ஆராய்ச்சிக்காக எங்கு கொண்டு செல்வது என்பது குறித்து அந்த குழுவினர் முடிவு செய்வார்கள்” என்றும் லியோவ் தெரிவித்தார்.
“காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வருவதால், கிடைத்திருக்கும் விமானப் பாகம் அங்கு அனுப்பப்பட வேண்டுமென ஆஸ்திரேலியா அதிகாரிகள் விரும்புகின்றனர். எங்களைப் பொறுத்தவரை, கிடைத்திருக்கும் பாகம் எங்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றது என்பது முக்கியமல்ல. அந்தப் பாகம் எம்எச் 370 விமானத்தினுடையதுதானா என்பதை உறுதிப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம்” என்றும் லியோவ் கூறினார்.
கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள புதிய மசீச கட்டிடத் திறப்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, லியோவ் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில் கிடைத்திருக்கும் விமானப் பாகம் குறித்த ஆரூடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார் லியோவ்.
கடந்த 2014ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி எம்எச் 370 விமானம் எந்தவிதத் தடயமும் இன்றி பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 239 பேருடன் மாயமாக மறைந்தது.