கோலாலம்பூர் – எம்எச்370 விமானம் மாயமாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாக மலேசிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டாலும் கூட, இன்றளவிலும் தங்களது அன்பு உறவுகள் திரும்ப வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பயணிகளின் உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தப் பேரிடரில், தாத்தா, பாட்டி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி என நெருங்கிய சொந்தகளை இழந்து, அவர்களை மறக்க முடியாமல் தவித்து வரும் எத்தனையோ உறவினர்களின் உருக்கமான கடிதங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றன.
அவர்களில் தனது தாயை இழந்து வாடும் கிரேஸ் சுபத்திரை நாதனும் (வயது 28) ஒருவர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், தனது தாய் அன்னே டெய்சி பயணம் செய்த எம்எச்370 விமானம் மாயமான செய்தியை அறிந்த போது, தான் அடைந்த அந்த துயரத்தை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார். அவர் இன்று தனது பேஸ்புக்கில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தகவலின் தமிழாக்கம் இதோ:-
“சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், மலேசிய நேரப்படி அதிகாலை 4.05 மணியளவில் மலேசியா ஏர்லைன்ஸ் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்திருந்தது. கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற அதன் போயிங் 777 ரக விமானங்களில் ஒன்று இரண்டு மணி நேரம், 43 நிமிடங்களாக ரேடார் தொடர்பில் இருந்து விலகி, எந்த ஒரு தகவலும் இன்றி இருந்தது.”
“ஒன்றரை மணி நேரங்களுக்கு முன்னர், 2.35 மணியளவில், அதன் செயலாக்கப் பிரிவு தவறான தகவல் வெளியிட்டிருந்தது. அதாவது மாஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவு (MAS Air Traffic Control), மாயமான விமானத்தில் இருந்து சமிக்ஞையைப் பெற்றதாகவும், விமானம் வியட்னாம் கடற்பகுதியில் பாதி வழியில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. பின்னர் தான் விமான நிறுவனம் (மாஸ்) அந்தத் தகவல் எந்த ஒரு சமிக்ஞையின் அடிப்படையிலும் கூறப்படவில்லை, மாறாக முன்கணிக்கப்பட்ட விமானப் பாதையின் படி கூறப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தது.”
“விமானத்தைத் தேடுகிறோம் என்று முயற்சி செய்து, பின்னர் முடியாமல் போய், மலேசிய மற்றும் வியட்னாம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு சுமார் 90 நிமிடங்களை வீணடித்துவிட்டது. அதோடு மலேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவு தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுடன் தொடர்பு கொண்டு, விமானத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக முயற்சி செய்து, மேலும் 1 மணி நேரத்தை செலவழித்தது. பின்னர் இறுதியாக அதிகாலை 5.20 மணியளவில் தான், எம்எச்370 விமானம் மலேசிய வான் எல்லைப் பகுதியையே தாண்டவில்லை என்ற முடிவுக்கு வந்து ‘சிவப்பு எச்சரிக்கை’ -ஐ விடுத்தனர் மலேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள். அதிகாலை 5.30 மணியளவில் தான், சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விமானம் தொடர்பில் இருந்து விலகிய பின்னர், அது பற்றி தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவுக்கு தெரிவித்துள்ளனர்.”
“சீனாவில் இருந்த எனது தந்தை, அந்த விமானத்தில் (எம்எச்370) வரும் எனது தாயை அழைத்துச் செல்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரமான காலை 6.30 மணியளவில் விமான நிலையத்தில் காத்திருக்கிறார். 1300 மைல்களுக்கு அப்பால், எம்எச்370 அதன் கடைசி இரண்டு மணி நேரங்களில் நுழைந்து அதோடு மாயமாகிவிட்டிருந்தது.”
“ஏறக்குறைய மலேசிய நேரப்படி காலை 7.30 மணியளவில், எனது தந்தை எனக்கு தொலைப்பேசியில் அழைத்தார். அப்போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். அங்கு அதிகாலை 1 மணியை நெருங்கியிருந்தது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு வந்த மிகத் துயரமான அழைப்பு அது தான். இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும், என்னுடைய தாய் எங்கிருக்கிறார்? அல்லது அவருக்கு என்ன ஆனது? என்பது பற்றி எனக்கு எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. என்னுடைய இதயம் இன்னும் உடைவது ஏன் என்று தெரியவில்லை காரணம் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்பதும் தெரியவில்லை.”
“அம்மா.. எங்க இருக்கீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? நீங்க நல்லா இருக்கீங்களா? அத்தனை மணி நேரமான விமானத்தில் நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரிந்ததா? நீங்க பயந்தீங்களா? தூக்கத்தில் இருந்தீர்களா? என்னை மன்னிச்சிருங்க எங்களால் உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நான் சத்தியமா சொல்றேன். நான் என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்துகிட்டு இருக்கேன். ஏன்னா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். உங்க பிரிவால மிகவும் வாடிப்போயிருக்கேன். உங்க மேல இருக்குற நம்பிக்கையை நான் என்னைக்கும் இழக்கப் போறதில்லை.” – இப்படியாக கிரேஸ் தனது துயரத்தை வார்த்தைகளால் விவரித்துள்ளதை படிப்பவர்களை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது.
படம்: கிரேஸ் பேஸ்புக்.