சென்னை – தமிழக சட்டசபை தேர்தலில் இம்முறை அதிமுக சார்பில் அதிகளவு 50 பெண் வேட்பாளர்களை களமிறக்க முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சிகள் தங்களது சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த ஞாயிறன்று அதிமுக சார்பில் போட்டியிட விரும்பி வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சட்டசபையில் உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் அதிமுகவில் உள்ள 50 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு இடம் வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கேற்ற வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியிட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலிலும் பெண்களை அதிகளவில் ஜெயலலிதா நியமனம் செய்திருந்தார். மகளிரணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திரா நியமிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த சட்டசபை தேர்தலிலும் பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளாராம். கடந்த சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து 21 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
இதில் 15 பேர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 20 பேர் தான் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது வெறும் 12 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.