கோலாலம்பூர் – 13-வது பொதுத்தேர்தலின் போது, தேர்தல் செலவிற்காக பாரிசான் 1.5 பில்லியன் ரிங்கிட் செலவு செய்ததாக, அம்னோ தலைவர்களுடனான கூட்டம் ஒன்றில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கே வெளியிட்டதாக முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
டின் டார்டில் என்ற வலைப்பதிவாளர் யூடியூப்பில், முக்ரிஸ் பேசும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் முக்ரிஸ் பேசுகையில், “அரபு நாட்டில் இருந்து நன்கொடையாக 2.5 பில்லியன் ரிங்கிட் வந்ததாகக் கூறப்பட்டது. தேர்தலில் 1.5 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துவிட்டபோது, 1.1 பில்லியன் தானே மிச்சம் இருக்கும்? பின் எப்படி 2.03 பில்லியன் ரிங்கிட் திரும்பக் கொடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அம்னோ தலைவர்களுடன் நடந்த அந்தக் கூட்டத்தை நினைவு கூறும் முக்ரிஸ், அன்றைய நாளில் தேர்தல் செலவுகள் குறித்து தான் நஜிப்பிடம் கேள்வி எழுப்பியபோது, அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் இடைமறித்து பதிலளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நிறைய செலவு செய்தோம் என்று கூறிய அட்னான், எவ்வளவு என்று கணக்கு சொல்லவில்லை என்று முக்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, திடீரென இடையில் புகுந்த நஜிப், 13-வது பொதுத்தேர்தலுக்காக 1.5 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளோம் என்று தெரிவித்ததாகவும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தும் கூட, தேர்தலில் ஏன் தேசிய முன்னணி முன்பை விட மோசமான முடிவைப் பெற்றுள்ளது என்று தான் கேள்வி எழுப்பிய போது, “நீ இன்னும் சிறுவன் தான்.. உனக்கு என்ன தெரியும்?” என்று தனக்குப் பதிலளித்ததாகவும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.
தகவல்: மலேசியாகினி