Home Featured நாடு பாஸ் கட்சியும் – ஹாடி அவாங்கும் இக்கட்டான சூழ்நிலையில்! நஜிப்புக்கு ஆதரவா? திரெங்கானுவைக் கைப்பற்றுவதா?

பாஸ் கட்சியும் – ஹாடி அவாங்கும் இக்கட்டான சூழ்நிலையில்! நஜிப்புக்கு ஆதரவா? திரெங்கானுவைக் கைப்பற்றுவதா?

740
0
SHARE
Ad

கோலதிரெங்கானு – நேற்று திரெங்கானு சட்டமன்றத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் மந்திரிபெசாருமான, டத்தோஸ்ரீ அகமட் சைட் அதிரடியாக நடப்பு மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்திருப்பது, நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிரான காய் நகர்த்தல்களில் ஒன்றாகவும், முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் ஆகியோரின் அரசியல் வியூகமாகவும் பார்க்கப்படுகின்றது.

 

ahmad-said

#TamilSchoolmychoice

(டத்தோஸ்ரீ அகமட் சைட்)

அம்னோ-தேசிய முன்னணி சார்பாக தற்போது 17 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஸ்-பிகேஆர் சார்பாக 15 உறுப்பினர்களும் தற்போது திரெங்கானு சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர்.

பாஸ் கட்சி சார்பாக 14 சட்டமன்ற உறுப்பினர்களும், பிகேஆர் கட்சி சார்பாக 1 சட்டமன்ற உறுப்பினரும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இரண்டே இரண்டு தொகுதிகள் வித்தியாசத்தில்தான் தேசிய முன்னணி இங்கு ஆட்சி புரிந்து வந்துள்ளது.

நேற்றைய தீர்மானம், திரெங்கானு சட்டமன்ற சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டு விட்டது என்றாலும், இதுவரை நீறுபூத்த நெருப்பாக திரெங்கானு அரசியலில் இருந்து வந்த பிரச்சனைகள் தற்போது வெடித்து, பூதாகாரமாக வெளிக்கிளம்பி விட்டன.

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் அரசியல் பிணக்குகள்

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மந்திரி பெசாராகப் பதவியேற்ற அகமட் சைட், ஓராண்டு கழிந்ததும், நஜிப்பால் மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கப்பட, அதனால் பிரச்சனைகள் வெடித்தன.

தொடர்ந்து நஜிப்பின் தலையீட்டால், அங்கு சுமுகமாக அரசியல் நிலைமை ஏற்படுத்தப்பட்டு, புதிய மெந்திரி பெசாராக, டத்தோஸ்ரீ அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டார்.

ahmad-razif-abdul-rahman_M_140512-1-560x360

( டத்தோஸ்ரீ அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான்)

இருப்பினும், அந்தப் பதவி மாற்றத்திற்கு வஞ்சம் தீர்ப்பதற்காக தருணம் காத்திருந்த அகமட் சைட் தற்போது தனது பழிவாங்கல் காட்சியை அரங்கேற்றியிருக்கின்றார் – நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம்!

இனி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, திரெங்கானு சட்டமன்றம் ஆட்டம் கண்டபடிதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் நஜிப் தலைமைத்துவதற்கு உறுதியாக இருந்தாலும், பாஸ் கட்சி விரும்பினால்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுதான் இப்போதைய புதிய நெருக்கடி.

ஹாடி அவாங் நிலைப்பாடு என்ன?

நஜிப்புடன் நெருக்கமும், நட்பும் பாராட்டி வரும் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் இந்தப் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்வுக்கும், முடிவுக்கும் அகமட் சைட் கொண்டு வந்திருக்கும் தீர்மானம் குறித்த விவகாரங்களை விட்டுவிட்டதாகவும், தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நடுவிலோ, அல்லது தவணை முடிவதற்கு முன்பாகவோ, ஒரு மாநில ஆட்சியை கவிழ்ப்பதில் ஹாடி அவாங்கிற்கு உடன்பாடில்லை என திரெங்கானு மாநில பாஸ் கட்சியில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.NAJIB HADI 2

ஆனால், மாநில ஆட்சியைக் கைப்பற்றும் அபார வாய்ப்பு கண்முன்னே இருக்கும்போது, அதனை விட்டுவிட பாஸ் கட்சியின் மற்ற தலைவர்களுக்கு மனம் வருமா?

ஹாடி அவாங் இந்தப் பிரச்சனையில் நஜிப்புக்கு ஆதரவாகவும், தேசிய முன்னணிக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தால் அதனால், அவருக்கு எதிராக பாஸ் கட்சிக்குள்ளும் வலுவான எதிர்ப்பு ஏற்படும் எனக் கருதப்படுகின்றது.

இதற்கிடையில், திரெங்கானு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த அகமட் சைட், மகாதீருக்கு ஆதரவானவர் என்றும், மொகிதின் யாசினின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகின்றது.

நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக அம்னோவுக்குள் சிறு பொறிகளாக போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன  என்பதையும் – மகாதீர், மொகிதின் இடையிலான வலுவான கூட்டணி, அம்னோவில் நஜிப்பின் தலைமைத்துவம் மீது நெருக்குதல்களை உருவாக்கும் படலத்தைத் தொடங்கியுள்ளது என்பதையும் நேற்றைய திரெங்கானு சட்டமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் காட்டுகின்றது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-இரா.முத்தரசன்