Home Featured தமிழ் நாடு விஜயகாந்த்-திருமாவளவன் தலைமையில் புதிய அணி அமைக்க பா.ஜ.க. திட்டம்!

விஜயகாந்த்-திருமாவளவன் தலைமையில் புதிய அணி அமைக்க பா.ஜ.க. திட்டம்!

586
0
SHARE
Ad

vijayakanthசென்னை – தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி ஆகிய 3 அணிகள் உறுதியாகி விட்டன. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. அணியில் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் விஜயகாந்திற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர். தங்கள் அணியில் சேர்ந்தால் முதல்வர் பதவியும் தருவதாக உறுதியளித்தனர்.

விஜயகாந்தை வளைக்க பா.ஜனதா தரப்பிலும் கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் அவரிடத்தில் பேசி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

மக்கள் நலக்கூட்டணி, பா.ஜ.க. ஆகிய கட்சிகள் விஜயகாந்துடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தங்கள் கட்சிக்கு பலமாக இருக்கம் என்று கருதி பல்வேறு மட்டத்திலும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.

ஆனாலும் தான் எந்த கட்சியிடத்திலும் பேசவில்லை. கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என விஜயகாந்த் சமீபத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இந்த நிலையில் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாக பல தகவல்கள் வந்தாலும் அதனை தே.மு.தி.க. இதுவரை உறுதி செய்யவில்லை.

இதற்கிடையில் விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணி தலைவர்களில் ஒருவரான திருமாவளவன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு மீண்டும் திருமாவளவன் அழுத்தம் கொடுத்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அந்த அணியில் ஒரு சில கட்சிகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.

விஜயகாந்தை முன்னிறுத்தி செல்லும் இந்த அணியில் மக்கள் நலக்கூட்டணி இடம் பெறவும் முயற்சி செய்யப்பட்டது. அதனை மக்கள் நலக்கூட்டணி ஏற்க மறுத்ததையடுத்து திருமாவளவனை மட்டும் அந்த கூட்டணியில் இருந்து இழுக்க விஜயகாந்த் முயற்சி செய்துள்ளார்.

தே.மு.தி.க., விடுதலை சிறுத்தை, பா.ஜனதா மற்றும் ஒரு சில சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. திருமாவளவனை புதிய கூட்டணியில் சேர்க்க விஜயகாந்த் மட்டுமின்றி பா.ஜ.க.வில் உள்ள முக்கிய தலைவர்களும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அவர் பா.ஜனதாவுடன் கூட்டு சேருவதற்கு தயக்கம் காட்டி வருகிறார். பா.ஜனதாவுடன் சேராமல் மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை திருமாவளவன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில் விஜயகாந்த் தரப்பில் இருந்து டெல்லி சென்று மத்திய மந்திரி ஜவடேகரை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

எனவே விஜயகாந்த் இன்னும் ஒரு சில நாட்களில் கூட்டணி குறித்த முடிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க இருக்கிறார். தி.மு.க.வுடன் சேருகிறாரா?, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பாரா? அல்லது புதிய அணியை அவரது தலைமையில் உருவாக்கி போட்டியிடுவாரா என்பது தெரிய வரும்.