சென்னை – தனக்கு எதிராக எழுந்துள்ள சில அதிருப்தி அலைகளையும், கூட்டணி முயற்சிகளையும் கவனமுடன் எதிர்கொள்ள, கட்டம் கட்டமாக வியூகம் வகுத்துச் செயல்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று அதிமுகவுடன் ஒத்த கருத்துடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்தவுடன், ஜெயலலிதா கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று, இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசு, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவை உள்ளிட்ட 7 கட்சிகளுடன் இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தக் கட்சிகள் சிறிய கட்சிகள் என்றாலும், தமிழகத்தின் சில வட்டாரங்களில் ஆதரவு பெற்ற கட்சிகள், சில சாதிகளின் ஆதரவைப் பெற்ற கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முஸ்லீம் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவதும் இன்று நிகழ்ந்த குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றமாகும்.