கூச்சிங் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை கேள்வி கேட்க முயன்றதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு ஆஸ்திரேலியப் பத்திரிக்கையாளர்களையும் காவல்துறை எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் இன்றி இன்று விடுவித்தது.
அவர்கள் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மாறாக, குடிநுழைவுச் சட்டம் 1959/63, பிரிவு 18 (3)எச்-ன் கீழ் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர் என்று சரவாக் குற்றப்புலனாய் துறையின் தலைவர் தேவ் குமார் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதன் படி, ஆஸ்திரேலிய புரோட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன் (Australian Broadcasting Corporation)என்ற அந்தத் தகவல் ஊடகத்தின் செய்தியாளர்களான லிண்டன் பெசெர் மற்றும் லூயி எர்குலு ஆகிய இருவரும் இன்று செவ்வாய்கிழமை கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
“எல்லாம் முடிந்தது நான் விடுவிக்கப்பட்டேன். ஆனால் தற்போது என்னால் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க இயலாது. காரணம் நாங்கள் எங்கள் விமானத்திற்கு அவசரமாகப் புறப்பட்டு செல்கிறோம்” என்று பெசெர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சரவாக் ஒரு அழகான இடம் என்று குறிப்பிட்டுள்ள பெசெர் தான் மீண்டும் குடும்பத்தோடு விடுமுறைக்கு வரப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், நஜிப்பிடம் தான் கேட்ட அந்த குறிப்பிட்ட கேள்வி என்னவென்பதையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகின்றது.
படம்: நன்றி (The Star)