கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் 2.6 பில்லியன் ரிங்கிட் ஊழல் குறித்துக் கேள்வி கேட்டதற்காகத் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர்களைத் தற்காத்து ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது.ஏ
அந்த இருவரும் ஊழல் விவகாரத்தில் செய்திகளைச் சேகரிக்க தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும், அந்தச் செய்திகள் இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என்றும் ஏபிசி தங்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
“கூச்சிங்கில் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் செய்தியாளர் பணியைத் தான் செய்தார்கள். அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் உரிமை உட்பட பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது”
“லிண்டன் மற்றும் லூயி தொடர்ந்து வேலை செய்வார்கள், ‘போர் கார்னர்ஸ்’ என்ற பகுதிக்கு தொடர்ந்து செய்திகளை எழுதுவார்கள். அடுத்து வரும் வாரங்களில் அவர்களின் முழு கட்டுரை வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம்” என ஏபிசி நிறுவனத்தின் இயக்குநர் கேபென் மோரிஸ் தெரிவித்துள்ளார்.