கோலாலம்பூர் – அல்தான்துயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து வருவதில் அரசாங்கம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கின்றது என்று ஜசெக நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்ப்பால் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இது அரசாங்கத்தின் கையாளாகாத தனத்தைக் குறிக்கிறதா? அல்லது சைருல் எங்கே இரகசியங்களை வெளியிட்டுவிடுவார் என்ற காரணத்தினாலா?”
“யார் அல்தான்துயாவைக் கொலை செய்யத் தூண்டியது என்ற தகவலை அவர் வைத்துள்ளார் என்ற காரணத்தினாலா?” என்று புக்கிட் ஜெலுத்துங் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்ப்பால் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சைருலை மலேசியாவிற்குக் கொண்டு வருவதில் அரசாங்கத்தின் செயல்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய தூதரகத் தடுப்பு மையத்தில் தற்போது வைக்கப்பட்டிருக்கும் சைருல், அல்தான்துயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற பின்னர், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுள்ளார்.
சொந்த நாட்டில் மரண தண்டனை பெற்று அரசாங்கத்தால் தேடப்பட்டு வருபவர்கள், ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் புகுந்துவிட்டால் அவர்களை திருப்பி அனுப்ப இயலாத வகையில் ஆஸ்திரேலியாவில் அரசாங்கத்தின் கொள்கை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.