ஹாவானா – வழக்கமாக தனது மனைவியுடன் மட்டும் அல்லது தனியாக அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று தனது வரலாற்றுபூர்வ கியூபா வருகைக்கு தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றார்.
மனைவி மிச்சல் ஒபாமா, இரு மகள்கள், மிச்சல் ஒபாமாவின் தாயார் மரியான் ரோபின்சன் என தனது மொத்த குடும்பத்தினருடன் கியூபா வந்திருக்கும் ஒபாமா, மழைத் தூறல் காரணமாக தானே குடை பிடித்துக் கொண்டு விமானத்திலிருந்து வெளியே வந்தார்.
வாஷிங்டனிலிருந்து கியூபா புறப்படும்போது கையசைத்து விடைபெறும் ஒபாமா தம்பதியர்…
உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 4.18 மணிக்கு ஹாவானாவை வந்தடைந்த ஒபாமா, கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதோடு, பல இடங்களுக்கும் வருகை புரிவார்.
நேற்று ஹாவானா வந்தடைந்ததும், அந்நகரின் பழமையான காலனித்துவ பகுதிகளை குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்த பின்னர் அமெரிக்க தூதரக பணியாளர்களிடையே உரையாற்றினார்.
இதற்கு முன் அமெரிக்க அதிபர் ஒருவர் கியூபா வந்தது 1928இல்தான். அதுவும் அப்போது கப்பலில்தான் கியூபா வந்தார் அன்றைய அமெரிக்க அதிபர்.
தனது வாழ்நாள் முழுக்க அமெரிக்காவுடன் பகைமை பாராட்டி வந்த கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவை தனது வருகையின்போது ஒபாமா சந்திக்க மாட்டார் எனத் தெரிகின்றது.
89 வயதான பிடல் காஸ்ட்ரோ, 1959இல் புரட்சியின் மூலம் கியூபாவைக் கைப்பற்றியவர் என்பதோடு, தனது பதவிக் காலத்தின் போது, ரஷியா சார்பு கொள்கைகளோடு வாழ்ந்தவர். கியூபாவை கம்யூனிச சித்தாந்தங்களோடு ஆட்சி செய்தவர். 1961இல் அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் போர் முற்றுகை ஏற்படும் அளவுக்கு நடந்து கொண்டவர்.
ஒபாமாவின் வருகையின்போது, இருநாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் முழுமையாக ஏற்படுத்தப்படுவதற்கான வழிமுறைகள் காணப்படும் என்பதோடு, அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வரும் கியூபா நாட்டுப் பகுதியான குவாண்டனமோ பே தீவை மீண்டும் கியூபா வசம் ஒப்படைப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெறும்.
குவாண்டனமோ தீவு கியூபாவின் கிழக்கு முனையில் உள்ள பகுதியாகும். இங்கு தனது இராணுவத் தளத்தை அமைத்துள்ள அமெரிக்கா, 1903ஆம் ஆண்டு முதல் பல்வேறு சரித்திர காரணங்களுக்காக அந்தத் தீவுப் பகுதியை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.
அங்குதான் பயங்கரவாதக் கைதிகளை அமெரிக்கா சிறை வைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.