Home Featured நாடு எம்எச் 370 – பலியானவர்களின் உறவினர்கள் வழக்கு தொடுக்கலாம்! கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

எம்எச் 370 – பலியானவர்களின் உறவினர்கள் வழக்கு தொடுக்கலாம்! கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

633
0
SHARE
Ad

கோலாலம்பூர் – காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகளின் உறவினர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கைத் தள்ளுபடி செய்யமுடியாது என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.

mh370இதைத் தொடர்ந்து காணாமல் போன அந்த விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் மாஸ் விமான நிறுவனத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுப்பதற்கான வாயில்கள் திறந்து விடப்பட்டுள்ளன.

எம்எச் 370 தொடர்பில் இதுவரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் மலேசிய நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதே போன்ற வழக்குகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

பயணிகளின் உறவினர்கள் தொடுத்திருக்கும் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் – காரணம், எங்களின் நிறுவனம், சம்பந்தப்பட்ட விமானம் காணாமல் போய் 8 மாதங்களுக்குப் பின்னர்தான் அமைக்கப்பட்டது என மாஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் இன்று வாதாடியது.

முன்பிருந்த மாஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் புதிய நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டு, மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் என்ற புதிய நிறுவனமாக தற்போது அது உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதற்காக முதல் கட்ட ஆட்சேபணையிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றும் வழக்கு முழுமையாக நடைபெற்று, இரண்டு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டபின்னர்தான், இந்த வழக்கை இறுதியில் தள்ளுபடி செய்வதா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் நிலைமை என்னவென்று இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

இன்றைய வழக்கு இந்த விமானம் தொடர்பிலான முதல் வழக்காகும். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மற்ற வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், விமானம் காணாமல் போனது தொடர்பில் மலேசிய அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என பயணிகளின் உறவினர்கள் இன்றைய வழக்கில் விடுத்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.