கோலாலம்பூர் –அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி பதவி விலக வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதைத் தொடர்ந்து, அந்த தீர்மானத்தைச் சமர்ப்பித்த வழக்கறிஞர்களை தேசநிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்க இன்று போலீசார் புக்கிட் அமானுக்கு அழைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து வழக்கறிஞர்கள் தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிக்க போலீஸ் தலைமையகம் புக்கிட் அமான் முன்பு இன்று கூடவேண்டும் என வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஸ்டீவன் திரு அழைப்பு விடுத்துள்ளார்
வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றின் மூலம் ஸ்டீவன் திரு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச்19ஆம் தேதி வழக்கறிஞர் மன்றப் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட – அபாண்டி அலியை பதவி விலகக் கோரும் தீர்மானத்திற்கு – 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்து நிறைவேற்றினர்.
இதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பித்த சார்ல்ஸ் ஹெக்டர் பெர்னாண்டஸ், பிரான்சிஸ் பெரைரா மற்றும் ஆர்.சண்முகம் ஆகிய மூவர் மீதும், வழக்கறிஞர் மன்ற செயலாளர் கேரன் சியா மீதும் காவல் துறையினர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறையினரின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்றும், சட்டப்படி வழக்கறிஞர் மன்றம் மேற்கொண்ட செயல்பாடுகள் மீது காவல் துறையினர் விசாரணை நடத்துவது, சட்டரீதியாக அமைக்கப்பட்ட வழக்கறிஞர் மன்றத்தின் செயல்பாடுகளில் அத்துமீறி இடையூறு செய்வதாகும் என்றும் ஸ்டீவன் திரு கண்டனம் தெரிவித்துள்ளார்.