கோலாலம்பூர் – ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையும், பிரதமர் நஜிப் துன் ரசாக் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.
விடுமுறைக்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நஜிப் செலவிட்டிருப்பதாகவும் அந்த செய்தி அறிக்கை கணக்குக் காட்டுகின்றது.
அமெரிக்கா, மலேசியா, இத்தாலி ஆகிய நாடுகளோடு மேலும் சில இடங்களில் அது போன்ற ஆடம்பரப் பொருட்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாட்களில் ஹோனோலுலுவிலுள்ள ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனைக் கடையில் 130,625 அமெரிக்க டாலருக்கு நஜிப்பின் பெயரிலான விசா அட்டையைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
மலேசியாவின் 1எம்டிபி விசாரணை அறிக்கையைப் பார்வையிட்ட பின்னரே வால்ஸ்ட்ரீட் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில், அமெரிக்காவின் ஹவாய் தீவிற்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தார் நஜிப்.
அங்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.