திருச்சி – தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி உறையூரில் நேற்று இரவு நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியபோது, நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கூறிய கருத்துகளை எடுத்துரைத்து பேசினார்.
இதற்கு திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ரஜினிகாந்த் சொன்னார், ‘மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று’. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன்” என்று பிரேமலதா பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, ரசிகர் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘1996-ஆம் ஆண்டு தேர்தலில் அப்போது இருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிகர் ரஜினிகாந்த் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதனை பிரேமலதா தற்போது கூறுவது தே.மு.தி.க – மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்களை திருப்புவது போல உள்ளது.
தமிழக அரசியலில் அனைத்து தலைவர்களிடமும் ரஜினிகாந்த் நல்ல சுமுகமான நட்புறவை கொண்டுள்ளார். அவர்களது ரசிகர்களும் அதுபோன்று அவரது வழியில் சென்று கொண்டுள்ளனர்.
இந்த நேரத்தில் பிரேமலதா பேசியிருப்பது அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.