மாஸ்கோ – அனைத்துலக புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.
இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் மற்றும் தற்போதைய பிரதமர்கள், உக்ரைன் அதிபர், சவுதி அரேபியா மன்னர் உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ரஷிய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளர்கள், அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் மற்றும் 140 அரசியல் தலைவர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.
இந்த பட்டியலில் ரஷிய அதிபர் புடினின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் கூட, அவர் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வங்கிகள் வழியாகவும், நிழல் நிறுவனங்கள் மூலமும் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வு செய்தியாளர்களின் பனாமா ஆவணங்கள் குற்றம் சாட்டி இருக்கிறது.
இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் குடும்பத்தினர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை, ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முன்டுர் டேவிட் குன்லாக்சன் ஆகியோரும் பல மில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி பத்திரங்களை பனாமா நாட்டில் வாங்கி சொத்துகளாக குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பிரபல நடிகர்-நடிகைகள் உள்பட 500 முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.