Home Featured தமிழ் நாடு வைகோ நாக்கில் சனி! கேவலமாகத் திட்டிவிட்டு பின்னர் மன்னிப்பு! “வாழ்நாளில் படிந்த கறை” –அவரே வர்ணிப்பு!

வைகோ நாக்கில் சனி! கேவலமாகத் திட்டிவிட்டு பின்னர் மன்னிப்பு! “வாழ்நாளில் படிந்த கறை” –அவரே வர்ணிப்பு!

913
0
SHARE
Ad

சென்னை – யாராவது தவறுதலாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டு அதன் காரணமாக மோசமான பின்விளைவுகளைச் சந்தித்தால் “அவனது நாக்கில் சனி வந்து இறங்கி விளையாடிவிட்டது” என்று நம்மவர்கள் வழக்கமாகக் கூறுவார்கள்.

நேற்று வைகோ பேசிய சில வார்த்தைகளும், அதைத் தொடர்ந்து அவர் சந்தித்த சம்பவங்களும் அதைத்தான் நினைவுபடுத்துகின்றன.

vaikoதேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களையும், மாவட்டச் செயலாளர்களையும் திமுக விலைகொடுத்து வாங்கி அரசியல் விளையாடுகின்றது என எழுந்த சர்ச்சைகளில் கலைஞரை மோசமாகத் திட்டி “இதற்கு வேறு தொழில் பார்க்கலாம்” என்றும் இதைவிட மோசமாகக் கூட கூறுவேன் என்றும் வைகோ கூறியதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியபோது தமிழக மக்கள் அதனை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

#TamilSchoolmychoice

காரணம், நாவன்மையிலும், கண்ணியத்திலும் கறைபடாத பெயர் எடுத்த வைகோ வாயிலிருந்து எப்படி இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிவருகின்றன என்ற அதிர்ச்சிதான்!

நடப்பது ஓர் அரசியல் போராட்டம்தானே? அவரவர்க்குத் தெரிந்த வியூகத்தில் அரசியல் நடத்துகின்றார்கள் – சாமர்த்தியம் இருந்தால் அதனை இன்னொரு அரசியல் வியூகத்தின் மூலம்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர,

கண்டனங்களைத் தெரிவிக்கும்போது இத்தனை தரம் தாழ்ந்த, கண்ணியக் குறைவான வார்த்தைகளை உதிர்ப்பது நியாயமில்லை என்ற பொதுவான கருத்து மக்களிடையே நேற்று பரவத் தொடங்கியது.

அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், வைகோ மேடையில் பேசும்போது உணர்ச்சி வேகத்தில் தவறுதலாகவோ, ஆத்திரத்தோடு பேசும்போது அவசரப்பட்டு உதிர்த்த வார்த்தைகளாகவோ – இவை தெரியவில்லை. பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நின்று நிதானித்து, நன்கு யோசித்துத்தான் இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.

அவரது உள்ளக் குமுறலின் வெளிப்பாடுதான் இது என்றாலும், வைகோவிடமிருந்து யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.

உடனடியாக, திமுகவினர் ஆங்காங்கு போராட்டங்களிலும் உருவ பொம்மை எரிப்பிலும் ஈடுபட்டனர்.

அவரது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவருக்கிருக்கும் நாவன்மையில் நேற்று, ஒரு கறைபடிந்த நாளாகவே அமைந்து விட்டது.

அவரும் அதை உணர்ந்து கொண்டுவிட்டவராக, தனது கண்ணியத்தை, அரசியல் பண்பைக் காட்டும் வகையில், உடனடியாக மன்னிப்பும் கேட்டு கடிதமும் எழுதிக் கொடுத்துவிட்டார். அவருடைய மக்கள் கூட்டணித் தலைவர்களும் அவரைக் கண்டித்துள்ளது, அந்தக் கூட்டணியில் நிலவும் ஆரோக்கிய அரசியல் சூழலையே காட்டியுள்ளது.

இருப்பினும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் வைகோ உதிர்த்த தகாத வாசகங்களும், அதைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்களும்,  தனது வாசகங்களை அவர் மீட்டுக் கொண்ட அரசியல் பண்பும் அனைவரின் நினைவிலும் நீண்ட நாளைக்கு நிலைத்து நிற்கும்.

-இரா.முத்தரசன்