கோலாலம்பூர் – விமானச் சேவைகளுக்கான கட்டணத்தை, அதிரடியாகப் பத்து மடங்கு உயர்த்தியுள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறையின் (டிசிஏ) நடவடிக்கையால், மலேசிய விமான நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
இந்த திடீர் கட்டண உயர்விற்கான காரணம் என்னவென்று விளக்கமளிக்க வேண்டும் என்றும் டிசிஏ-விற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக மிகக் குறுகிய காலத்தில் டிசிஏ முடிவுகளை எடுத்துள்ளதாகவும் விமான நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இது குறித்து ஏர் ஆசியா மலேசியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார் ஸ்டார்பிட்சிடம் தெரிவித்துள்ள தகவலில், “கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் குறித்து நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். விமான நிறுவனங்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒருவேளை படிப்படியாக கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தால் இந்த அளவிற்கு ஆச்சர்யம் இருந்திருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், மலேசியா ஏர்லைன்ஸ் பெர்காட் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டோபர் முல்லரும், புதிய விலைக் கட்டணம் குறித்து டிசிஏ விளக்கமளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.