தோக்கியோ- நேற்று ஜப்பானின் தென் மேற்கு தீவான கியூஷூ தீவை ரிக்டர் அளவில் 6.4 புள்ளி என்ற அளவில் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 9 பேர் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்களின் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதுவரையில் சுனாமி அபாயம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், வலுவான நிலநடுக்கத்தால், வீடுகள் இடிந்து விழுந்தன என்பதோடு, ஆங்காங்கு ஏற்பட்ட உரசல்களால் தீவிபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.
நேற்று இரவு முழுவதும், இடிபாடுகளுக்கிடையில் யாராவது சிக்கிக் கொண்டிருக்கின்றார்களா என தேடும் பணியை மீட்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். உடைந்து நெளிந்து, சேதமடைந்து போன சாலைகள், பெயர்த்தெடுக்கப்பட்ட சாலைகளின் கான்கிரிட் பாளங்கள் என நிலநடுக்கத்தின் பாதிப்புகளை தொலைக்காட்சி படங்கள் காட்டி வருகின்றன.
இதுவரையில் 780 பேர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படும் வேளையில், 9 பேர் மரணமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும் செய்திகள் தொடரும்)