கோலாலம்பூர் – திரெங்கானுவில் நேற்று முன்தினம் இரவு, இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சர்ச்சைக்குரிய இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்றிய போது, கூட்டத்திலிருந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
நேற்று முன்தினம் இரவு கெமாமன் பாடாங் அஸ்தாக்காவில் நடைபெற்ற கூட்டத்தில், சுமார் 40,000 பேர் கலந்து கொண்டனர். அப்போது வூ நீனா கிரேஸ் (வயது 19) என்ற மாணவி, ஷியாஹாடாவை (syahadah) ஓதிவிட்டு, தன்னை இஸ்லாமில் இணைத்துக் கொண்டதாகவும் மலேசியாகினி தெரிவித்துள்ளது.
கெமாமனில் உள்ள தனியார் கல்லூரி மாணவியான அவரது தாய் பிலிப்பைன்சைச் சேர்ந்தவர் என்றும், தந்தை ஜோகூரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
தனது 13 வயது முதல் வூ நீனா கிரேஸ் இஸ்லாமை படித்து வருகின்றார் என்றும் மலேசியாகினி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநில அரசாங்கம் அடுத்த ஆண்டும் ஜாகிரை உரையாற்ற அழைக்கப்போகிறது என்றும், அவரோடு அனைத்துலக அளவில் பிரபலமான இன்னும் சில போதகர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ரசிப் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.