கோலாலம்பூர் – எப்போதுமே வெளிப்படையாகவும், துணிச்சலுடனும் தனது கருத்துக்களை எடுத்து முன்வைக்கும் சுற்றுலா, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் (படம்) சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை வரவழைத்து உரைகள் நிகழ்த்த வேண்டிய அவசியம் இப்போதைக்கு என்ன எனக் கேள்வி தொடுத்துள்ளதோடு, நம்மிடையே நன்கு கற்றறிந்த இஸ்லாமிய மத அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஜாகிரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் அவரது உரை மிதமான ஒன்றாகத்தான் இருந்தது என்று கூறினாலும் மற்ற மதத்தினரும் அவ்வாறு கருதவில்லை என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.
“இதற்குக் காரணம் ஜாகிர் தன்மீது ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் தோற்றம்தான். கடந்த காலத்தில் அவர் எப்படி நடந்து கொண்டார், மற்ற மதங்களைப் பற்றிப் பேசும் போது என்ன கூறினார் என்பதை வைத்துத்தான் இப்போது அவர் எடைபோடப் படுகின்றார்” என்றும் நஸ்ரி மேலும் விளக்கியுள்ளார்.
“நீங்கள் பேசுவதாக இருந்தால், உங்கள் மதத்தை மட்டுமே பேசுங்கள். அதுதான் எனது எண்ணம். மற்ற மதங்களுடன் ஒப்பிட்டுப் பேசினால், இறுதியில் உங்களுடைய மதம்தான் மற்றவற்றை விட சிறந்தது என்ற முடிவுக்குத்தான் நீங்கள் வருவீர்கள்” என்ற அவர்
“இது பேச்சு சுதந்திரம் பற்றிய விவாதம் அல்ல. மாறாக மலேசியர்களாகிய நாம், மலேசியாவுடன் தொடர்பு இல்லாத ஒருவரால் ஏன் தேவையில்லாமல் பிளவுபட வேண்டும்?” என்றும் நஸ்ரி கேள்வி எழுப்பினார்.
“ஜாகிர் தனது உரைகளை நிகழ்த்தி விட்டு நாட்டைவிட்டுப் போய்விடுவார். ஆனால் அவரால் ஏற்படப்போகும் – அவர் விட்டுச் செல்லும் பிரச்சனைகள் அனைத்தும் மலேசியர்களாகிய நம்மிடையே சுமத்தப்பட்டு நம்மிடையே இருந்து வரும்” என்றும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.