Home Featured நாடு நஜிப்பை அகற்றும் போராட்டம்: மகாதீர் தலைநகர் வீதிகளில் இறங்கிப் பிரச்சாரம்!

நஜிப்பை அகற்றும் போராட்டம்: மகாதீர் தலைநகர் வீதிகளில் இறங்கிப் பிரச்சாரம்!

711
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கோலாலம்பூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலை சனிக்கிழமை மாலை முழுவதும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்படும். காரணம், அங்கு நடைபெறும் இரவு சந்தைதான்.

பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் நிறைய அளவில் கவரும் இந்த இரவு சந்தையில் மலாய்க்காரர்களும் நிறைய அளவில் கூடுவர். நேற்று நடைபெற்ற இந்த இரவு சந்தையில் கலந்து கொண்டு அந்தப் பகுதி வீதிகளில் நடந்து சென்ற ஒருவர் பலரின் கவனத்தையும் கவர்ந்தார்.

சந்தைக்கு வந்தவர்களையும், சந்தையில் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களையும் ஒருசேர ஈர்த்த அவர் வேறு யாருமில்லை!

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் துன் மகாதீர்தான்!

Mahathir-Azmin Ali-Coliseum-walk aboutஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் இரவு சந்தையில் வீதிப் பிரச்சாரத்துக்கிடையில் கொலிசியம் கஃபே உணவகத்தில் மகாதீரும், அஸ்மின் அலியும், மற்ற தலைவர்களும்….(படம் நன்றி: அஸ்மின் அலி டுவிட்டர் பக்கம்) 

“மலேசியாவைக் காப்பாற்றுவோம்” என்ற குழுவைச் சேர்ந்தவர்கள், பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுக்க பத்து இலட்சம் கையெழுத்துகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டுதான் மகாதீரும் நேற்று ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் இறங்கி, இரவு சந்தையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவரைச் சுற்றி பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு ஆர்வத்துடன் அவருடன் அளவளாவத் தொடங்கினர். மகாதீரைச் சுற்றி அவரது மெய்க்காப்பாளர்கள் பாதுகாப்புக்கு துணை வந்தாலும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும், நஜிப்பை அகற்றும் பிரகடனத்தில் கையெழுத்திட்டு அந்தப் பாரத்தை மகாதீரிடம் நேரடியாக அளிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்தில், ஒரு பெண்மணி பாரத்தில் கையெழுத்திட முயன்ற போது, தனது முதுகைக் காட்டி அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினார் மகாதீர்.

இந்த வீதிப் பிரச்சாரத்தில், மகாதீருடன் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் தியான் சுவா, பிகேஆர் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக், வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசன், பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா ஆகியோரும் இணைந்து ஈடுபட்டனர்.

பாஸ் கட்சியின் பொக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாஃபூஸ் ஓமார், மகாதீரின் நெருங்கிய அரசியல் சகாவும், பத்து கவான் அம்னோவின்  முன்னாள் உதவித் தலைவருமான கைருடின் அபு ஹாசான் ஆகியோரும் இந்த வீதிப் பிரச்சாரத்தில் மகாதீருடன் கலந்து கொண்டனர்.

வீதிப் பிரச்சாரத்துக்கு இடையில், அனைவரும் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானிலுள்ள புகழ்பெற்ற உணவகமான கொலிசியம் கஃபே-யில் பானங்கள் அருந்தி ஓய்வெடுத்தனர்.

-செல்லியல் தொகுப்பு