சேலம் – திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இருக்கும் கொள்ளையடிக்கும் தகுதி எனக்கு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு தேர்தல் அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி, தமாகா வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பேசினார்.
அப்போது, பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: “நான் எதிரிகளை கூட மன்னித்துவிடுவேன். ஆனால், துரோகிகளை மன்னிக்கவே மாட்டேன். விஜயகாந்த் முதலமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிலர் கேட்கின்றனர்”.
“பணத்தை கொள்ளையடிப்பது தான் தகுதி என்றால் அது உங்களிடம்தான் உள்ளது. அந்த தகுதி என்னிடம் இல்லை.நான் நல்லவனோ கெட்டவனோ ஆனால் எங்கள் கூட்டணி கட்சியில் இருக்கும் எல்லோரும் நல்லவர்கள். மக்களுக்கு துரோகம் செய்த யாரையும் இந்த விஜயகாந்த் மன்னிக்க மாட்டான்” என்று தெரிவித்தார்.