கரூர் – தமிழகத்தில் முதலில் முளைத்த ஊழல் விஷச் செடி கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். கரூர் மாவட்ட தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் குளித்தலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கரூர் தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசிய விஜயகாந்த், ”எதிரியைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகியை மன்னிக்கவே கூடாது. குளித்தலை தொகுதி, திமுக தலைவர் கருணாநிதியை தமிழகத்திற்கு அடையாளம் காட்டிய தொகுதி.
குளித்தலை தொகுதி மக்கள் நல்லவர்கள். கருணாநிதியை நம்பி வாக்களித்தனர். ஆனால் அவர் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றிவிட்டு, தொகுதி மக்களையும், தமிழக மக்களையும் மறந்துவிட்டார். அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்.
எங்கள் கூட்டணி ஆறுமுகம். இந்த ஆறுமுகம் என்பது ஏறுமுகம்தான். இதற்கு இறங்கு முகமே கிடையாது. 2016 சட்டமன்றத் தேர்தல், தேர்தல் அல்ல போர். நல்லவர்கள் ஆறு பேருக்கும் தீயவர்கள் இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் போர்.
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறும் இந்தப் போரில் தர்மமே வெற்றிபெறும். கருணாநிதியை கடலில் தூக்கி வீசினாலும் கட்டுமரமாக இருப்பேன் என்றார். அவர் கட்டுமரத்தை கவிழ்த்துவிடுவார். யாரையும் காப்பாற்றமாட்டார்.
தன்னை 6-ஆவது முறையாக முதல்வர் ஆக்குங்கள் என்று கூறுகிறார். பல்வேறு ஊழல்செய்து மக்களை ஏமாற்றி வருகிறார். தமிழகத்தில் முதலில் முளைத்த விஷச் செடி கருணாநிதி. இந்த செடி தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.
திமுகவும்-அதிமுகவும் பண முதலைகள். அவர்களிடம் முரட்டுப் பணம் உள்ளது. மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துகளை வைத்துள்ளார்.
தனக்கு குடும்பமே இல்லை என்று கூறும் ஜெயலலிதா சிறுதாவூர், போயஸ் கார்டன் ஆகியவற்றை ஏழைமக்களுக்கு பிரித்துக் கொடுப்பாரா? என விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.