கடலூர் – நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ரூ.35.36 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அதே நேரத்தில் தனியார் வங்கியில் ரூ. 8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி கயல்விழி பெயரில் ரூ.52.25 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தும், அறிமுகம் செய்து வைத்தும் பேசிய சீமான், கடலூர் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதில் சீமான் தமக்கும் தனது மனைவிக்கும் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்துள்ளார். சீமானிடம் கையிருப்பாக ரூ.40ஆயிரமும், வங்கிகளில் பல்வேறு இருப்புகளாக ரூ. 81,176 உள்ளது. ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் உள்ளது. 150 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளன.
இவைகளின் மொத்த மதிப்பு ரூ.35,36,177 ஆகும். அசையாச் சொத்துக்களான வீடு, நிலம் உள்ளிட்டவை ஏதும் இல்லை. தனியார் வங்கியில் ரூ.8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சீமான் தன்மீது 3 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.