நியூயார்க் – உலக சந்தையில் கடந்த 13 ஆண்டுகால ஐபோன் விற்பனையில் கோலோச்சி வந்த ஆப்பிள் நிறுவனம், முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது.
இது குறித்து நேற்று செவ்வாய்கிழமை அந்நிறுவனம் வெளியிட்ட காலாண்டு விற்பனை அறிக்கையில், முதல் காலாண்டு விற்பனையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, 2-ம் காலாண்டில் மிகப் பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் 104 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனப் பங்குகள் மள மளவென குறைந்து 96 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டன.
இதனால் ஒரு மணி நேரப் பங்கு வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்தது. ஆப்பிள் நிறுவன வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில், இந்தச் சரிவில் இருந்து ஆப்பிளை மீளச் செய்ய, பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை ஆப்பிள் நிறுவனம் வாங்க உள்ளதாக ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் அறிவித்துள்ளார்.