கோலத்திரெங்கானு – சர்ச்சைக்குரிய டாக்டர் ஜாகிர் நாயக் (படம்) பிரச்சாரம் செய்ய மூன்று தீவுகளை வழங்கும் திரெங்கானு மந்திரி பெசாரின் முடிவு மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுமில்லை-அங்கீகரிக்கப்படவுமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான கசாலி தாயிப் இது மந்திரி பெசாரின் சொந்த முடிவு என்றும் இது குறித்து மாநில ஆட்சிக் குழுவில் பேசப்படவில்லை என்றும் பிரி மலேசியா டுடே இணையத் தள செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிலங்கள் ஒருவருக்கு வழங்கப்படுமானால், அந்த விவகாரம் ஆட்சிக் குழுவில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதோடு, சுல்தானும் அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கசாலி தெரிவித்திருக்கிறார்.
தனியார் நிலங்களைத் தவிர மற்ற மாநில நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கும், சுல்தானுக்கும் சொந்தமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜாகிர் நாயக் திரெங்கானுவில் பேச அனுமதித்தை சுல்தான் விரும்பவில்லை என்றும் தனது முன் அனுமதியைப் பெறாமலேயே 3 தீவுகளை வழங்க அனுமதித்ததையும் சுல்தான் விரும்பவில்லை என்றும், அதனால்தான் திரெங்கானு மந்திரி பெசாரின் பட்டங்கள் பறிக்கப்பட்டன என்றும் தகவல் ஊடகங்கள் ஆரூடங்கள் வெளியிட்டுள்ளன.