திண்டுக்கல் – அ.தி.மு.க-தி.மு.கவிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற பா.ம.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள் என திண்டுக்கல்லில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். திண்டுக்கல்லில் பா.ம.க. சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பா.ம.க. முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:- 50 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் வேண்டாம். தமிழகத்தில் மாற்றம், புதுமை வேண்டும். இதற்கு யாராவது வரமாட்டார்களா? என அனைத்து தரப்பு மக்களும் ஏக்கத்தில் இருக்கிறார்கள்.
அரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த 2 கட்சிகளும் மதுவை திணித்து, இலவசம் கொடுத்து மக்களை கையேந்த வைத்துவிட்டார்கள். ஏழைகள் பொருளாதாரத்தில் பாதாளத்திற்கு சென்று விட, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள்.
வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி எதுவும் இல்லை. எனவே, நீங்கள் மனதில் ஒரு கேள்வியை கேளுங்கள். 50 ஆண்டுகள் செய்யாததையா, இனி செய்வார்கள் என்று கேட்டுபாருங்கள். மாற்றம் வரவேண்டும் என்று முடிவு எடுங்கள்.
இந்த 2 கட்சிகளையும் புறக்கணித்து, அன்புமணிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். எனக்கு பதவி ஆசை கிடையாது. 35 வயதிலேயே மத்திய அமைச்சராக பதவி வகித்து விட்டேன்.
தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும், 2 கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நான் உங்களுக்கு, முதலமைச்சராக இருக்க மாட்டேன். முதல் ஊழியனாக இருப்பேன். சிந்தித்து முடிவு எடுங்கள் என அன்புமணி ராமதாஸ் பேசினார்.