கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் எஸ்இ (iPhone SE) ரக திறன்பேசிகள் எதிர்வரும் மே 13ஆம் தேதி முதல் மலேசியாவில் விற்பனைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த ஐபோன் ரகம் அறிமுகம் கண்டு விட்டது.
16 ஜிபி எனப்படும் கொள்ளளவு கொண்ட ஐபோன்கள் 1,949 ரிங்கிட் விலையிலும், 64 ஜிபி எனப்படும் அதிக கொள்ளளவு கொண்ட ஐபோன்கள் 2,449 ரிங்கிட் என்ற விலையிலும் விற்கப்படும்.
வெள்ளி (silver), வெளிர் கறுப்பு (space gray), பொன்னிறம் (gold), ரோஜா பொன்னிறம் (rose gold) ஆகிய வண்ணங்களில் இவை கிடைக்கும்.
வழக்கம்போல் உள்நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு மாதாந்திரத் தவணைக் கட்டணம் மூலம் இந்த ஐபோன்களை பொதுமக்கள் வாங்கும் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.
சில நிறுவனங்கள் முன்பதிவுகளைத் தொடங்கிவிட்டன. முன்பதிவு செய்து கொண்டவர்கள் மே 13ஆம் தேதி தங்களின் ஐபோன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அண்மைய தகவல் ஊடக அறிக்கை ஒன்றின்படி, உலகம் முழுவதும் ஐபோன்களின் விற்பனை விகிதாச்சாரம் சரிந்துள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மலேசியாவில் விற்பனைக்கு வரும் புதிய ரக ஐபோன்கள் விற்பனையில் சாதிக்குமா என்பதைக் காண கைத்தொலைபேசி வணிக வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.