Home Featured நாடு மகாதீருக்கு பாதுகாப்பை மீட்டுக் கொண்டதால் மக்கள் மனங்களில் மதிப்பை இழந்த நஜிப் தலைமைத்துவம்!

மகாதீருக்கு பாதுகாப்பை மீட்டுக் கொண்டதால் மக்கள் மனங்களில் மதிப்பை இழந்த நஜிப் தலைமைத்துவம்!

756
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீர் எத்தகைய சித்தாத்தங்களைக் கொண்டவராக இருந்தாலும், நடப்பு பிரதமர் நஜிப்புக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலும், அவர் ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் அவருக்கென சில கௌரவங்களும், மரியாதைகளும் கொடுக்கப்பட வேண்டும்.

Mahathir-anti GST rallyஅரசாங்க எதிர்ப்புக் கூட்டமொன்றில் – எதிர்க்கட்சித் தலைவர்களுடன் – உரையாற்றும் மகாதீர்…

அந்த வகையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பை மீட்டுக் கொள்வது என்பது மக்கள் மனங்களில் நஜிப் தலைமைத்துவம் மீதான மதிப்பை வெகுவாகக் குலைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

#TamilSchoolmychoice

90 வயது மூத்த தலைவர் – 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் – என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இத்தகைய நடவடிக்கையை நஜிப் தலைமைத்துவம் எடுத்திருப்பது கீழ்த்தரமான  அரசியல் நடவடிக்கையாகவே மக்களால் பார்க்கப்படும்.

சட்டரீதியாக செல்லுமா? – சுரேந்திரன் வாதம்

surendran-sliderமகாதீருக்கான காவல் துறை பாதுகாப்பை மீட்டுக் கொண்டது சட்டரீதியாக முறையற்றது என்றும், அவர் பிகேஆர் போன்ற எதிர்க்கட்சிக் கூட்டங்களுக்கு சென்றாலும், அரசாங்க எதிர்ப்புக் கூட்டங்களுக்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படத்தான் வேண்டும் என்ற வாதத்தை பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான சுரேந்திரன் முன் வைத்திருக்கின்றார்.

“மகாதீர் ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில்தான் அவருக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவதால் அந்த பாதுகாப்பை மீட்டுக் கொள்ள முடியாது” என சுரேந்திரன் வாதிட்டுள்ளார்.

மகாதீர் என்ன செய்யவேண்டும், எங்கே செல்ல வேண்டும், என்பதை சுதந்திரமான நாட்டின் குடிமகன் என்ற முறையில் அவர்தான் நிர்ணயித்துக் கொள்ளவேண்டுமே தவிர, அவருடைய தனிப்பட்ட உரிமையில் தலையிட காவல் துறைக்கு உரிமையில்லை என்றும் சுரேந்திரன் சாடியுள்ளார்.

மகாதீர் என்ன செய்ய வேண்டும் – செய்யக் கூடாது என்று கூறும் அதிகாரம் காவல் துறைக்கு இல்லை என்றும் சுரேந்திரன் கூறியுள்ளார்.

” மகாதீர் பாதுகாப்பு மீட்கப்பட்டது தொடர்பில் சுரேந்திரன் நீதிமன்றம் செல்லலாம்” – ஐஜிபி சவால்

Khalid Abu Bakarஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டார் – நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக நடந்து கொள்கின்றார் என்பது போன்ற காரணங்களால், அவருக்கான பாதுகாப்பை மீட்டுக் கொள்வதாக காவல் துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் (படம்) தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் சுரேந்திரன் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில், பதில் கொடுத்த காலிட் அபு பாக்கார் “வேண்டுமானால், மகாதீருக்கு பாதுகாப்பை மீட்டுக் கொண்ட விவகாரத்தை சுரேந்திரன் நீதிமன்றம் கொண்டு செல்லலாம். இது சுதந்திரமான நாடு. நீதிமன்றம் இது சரியா இல்லையா என்பதை முடிவு செய்யட்டும்” என்றும் சவால் விட்டுள்ளார்.

மகாதீருக்கான பாதுகாப்பு ஒவ்வொரு சம்பவத்தின் அடிப்படையில் தேவையா, இல்லையா என்பது நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறியுள்ள காலிட், எந்த சூழ்நிலையிலும் மகாதீரின் பாதுகாப்பு மீது காவல் துறை மெத்தனமாக இருக்காது என்றும் உறுதியளித்தார்.

பாதுகாப்பு தேவையென மகாதீர் வேண்டுகோள் விடுத்தால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் காலிட் உறுதியளித்துள்ளார்.

காவல் துறை அனுமதியில்லாத எதிர்ப்புக் கூட்டங்கள், சட்டவிரோதக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு மகாதீர் செல்லும்போது, காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் முன் சென்று வழிநடத்திச் செல்லும் சலுகைகள் இனி மகாதீருக்குக் கிடையாது என திட்டவட்டமாக கூறியிருக்கின்றார் காலிட்.

-செல்லியல் தொகுப்பு