புதுச்சேரி – சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த ராகுல்காந்திக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தனது பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
புதுவை சட்டமன்றத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரச்சாரம் செய்வதாக இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளருமான நாராயணசாமியின் வீட்டிற்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில், ‘‘நீங்களும், உங்கள் கட்சியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பாதகமாக செயல்படுகிறீர்கள். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நீங்கள் பிரச்சாரம் செய்யும் இடத்தில் உங்களை தாக்குவோம்.
அதேபோல் உங்கள் தலைவரின் மகன் (ராகுல்காந்தி) பிரச்சார மேடையில் இருக்கும்போது குண்டு வைத்து தகர்ப்போம்’’ என்று எழுதப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, காரைக்காலில் ராகுல்காந்தி பிரச்சாரத்தின்போது பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் பிரச்சாரம் செய்யும் இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராகுல்காந்தி தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் மருத்துவ காரணங்களுக்காக தான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரச்சாரம் செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.